குஜராத் சட்டசபை தேர்தல் : கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி மற்றும் ஹர்திக் பட்டேல் போட்டி..!
182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 இடங்களுக்கும், 2-வது கட்ட வாக்குப்பதிவில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடக்கிறது.
இந்தநிலையில் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மொத்தம் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். முதல் கட்டத்தில் 84 தொகுதியின் வேட்பாளர்களும், 2-வது கட்டத்தில் 76 தொகுதி வேட்பாளர்கள் விவரத்தையும் பாஜக வெளியிட்டுள்ளது.
இதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாவுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ரிவபா கடந்த 2019-ம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த 3 ஆண்டுகளில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர் விரம்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
குஜராத் முதல் அமைச்சர் பூபேந்திர படேலுக்கு மீண்டும் டிக்கெட் கொடுத்து உள்ளது. அவர் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். 160 வேட்பாளர்களில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 69 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 38 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. வேட்பாளர் பட்டியலில் 14 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். எஸ்.சி. பிரிவை சேர்ந்த 13 பேருக்கும், எஸ்.டி. பிரிவை சேர்ந்த 24 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
Leave your comments here...