அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் BSNL மூலம் 5ஜி சேவை – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்
‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
நாட்டில் 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் அறிமுகமாகிறது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, இன்னும் 6 மாதங்களில் நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்கப்படும். குறைந்த விலையில் 5ஜி சேவை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave your comments here...