மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை..!
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.4 கோடியே 90 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு சென்றது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக விசாரணையும் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குப்பதிவை தொடர்ந்துதான் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களையும், அவருடைய குடும்பத்தினர் சொத்துக்களையும் அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக அமலாக்கதுறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்கதுறை சார்பாக வாதிடப்பட்டது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், அமலாக்கத்துறை பதில்மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணைக்கு விதித்த தடையை நீட்டித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 4 மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதே புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், விசாரணைக்கு அழைத்தால் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கிய நிலையில் சுமார் 160 ஏக்கர் நிலம் உள்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள 18 சொத்துக்களும் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave your comments here...