நாள் ஒன்றுக்கு 10 குழந்தைகள் : பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தான் நாட்டில் ஆபாச படம் எடுத்தல், சிறுமிகளை கடத்துதல் உள்ளிட்ட கும்பல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. 2021-ம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து 20 லட்சத்திற்கும் கூடுதலான குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன என மெட்டா (பேஸ்புக்) மற்றும் மூத்த போலீசார் சமீபத்தில் தெரிவித்து உள்ளனர்.
குழந்தைகள் உரிமைகள் நல குழுக்கள் தொடர்ந்து இந்த குற்றங்களுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், போலீசாரோ அல்லது அரசியல் கட்சிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 2021-ம் ஆண்டில் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் கசூர் மாவட்டத்தில் கும்பல்களின் குழந்தை கடத்தல் சம்பவங்கள் 298 என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ராவல்பிண்டி (292) மற்றும் இஸ்லாமாபாத் (247) நகரங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
இந்நிலையில், தி சிங்கப்பூர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ள பாதிப்புகளில் சீரழிந்து போயுள்ள அந்நாட்டில், சிந்த் மாகாணத்தில், உணவு தேடி சென்ற ஒரு சிறுமியை, கும்பல் ஒன்று கடத்தி சென்று, அறையில் பல நாட்கள் வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையில் ஈடுபட்டு உள்ளது.
சமூக ஊடகத்தில் வீடியோ வைரலான நிலையில், நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். குற்றவாளிகளை தேடும் பணிக்கு முடுக்கி விடப்பட்டு உள்ளனர். வெள்ள பாதிப்புக்கு இடையேயும், அந்த நாட்டில் சிறுமிகள் கடத்தல், பலாத்காரம் உள்ளிட்ட வன்கொடுமைகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் லாகூர் நகரில் 10 வயது சிறுமி இதே முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர முறையில் கொல்லப்பட்டு உள்ளார். சிறுமியின் உடல் தனியார் நீச்சல் குளம் ஒன்றில் மிதந்துள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி சிந்த் மாகாணத்தில் உமர்கோட் பகுதியில் 8 வயது சிறுமி இதேபோன்ற முறையில் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், சிறுமியின் இரண்டு கண்களையும் கொடூர கயவர்கள் பறித்த அவலமும் நடந்தேறியுள்ளது. கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி சிந்த் மாகாணத்தில் சங்கார் மாவட்டத்தில் காய்கறி வாங்க வீட்டை விட்டு வெளியே சென்ற 16 வயது இந்து சிறுமியை ஆட்டோ ரிக்சாவில் வந்த இருவர், ரேசனில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உணவு பொருட்கள் தருகின்றனர்.
அதனை வாங்கி தருகிறோம் என கூறி அழைத்து சென்றுள்ளனர். இதன்பின்பு, அந்த சிறுமியை ஓரிடத்திற்கு கொண்டு சென்று மயக்க மருந்து ஊசி செலுத்தி, 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து, மக்கள் கூடும் பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளனர். மயங்கி கிடந்த அவரை அந்த பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த இருவரையும் தனக்கு நன்றாக தெரியும் என்றும் அந்த பகுதியில் ஆட்டோ ரிக்சா ஓட்டுபவர்கள் என்றும் குற்றவாளிகளை பற்றி பகவதி என்ற அந்த சிறுமி போலீசில் தெரிவித்து உள்ளார். அவர்கள் இருவரும் காலித் மற்றும் தில்ஷர் என பின்னர் அறியப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று, வெள்ளம் பாதித்த உமர்கோட் பகுதியில் உள்ள இந்துக்கள் சாலையோரம் வசித்து வந்துள்ளனர். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த குண்டர்களை நோக்கி பெண்கள் கூட்டாக சத்தம் போட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குண்டர்கள் தப்பியோடி உள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு பாகிஸ்தானில் 10 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாகின்றனர் என தி சிங்கப்பூர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இது 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட சம்பவங்களை விட 30 சதவீதம் அதிகம் ஆகும். இதனால், மக்களை காக்க வேண்டிய இடத்தில் உள்ள அரசு அந்த நிலையில் தோல்வியடைந்து விட்டது என்பதன் தெளிவான அடையாளத்தினை இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன. பாதிக்கப்படும் குழந்தைகளில் 54 சதவீதத்தினர் சிறுமிகளாகவும், 46 சதவீதத்தினர் சிறுவர்களாகவும் உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
Leave your comments here...