62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு -மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்.!

இந்தியாதமிழகம்

62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு -மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்.!

62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு -மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்.!

தஞ்சாவூர் மாவட்டம் திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 2,000 ஆண்டு பழமையான நடராஜர் வெண்கல சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் அடுத்த திருவேதிக்குடி கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த, சோழர் காலத்தை சேர்ந்த நடராஜர் வெண்கல சிலை 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது.

இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வெங்கடாச்சலம் என்பவர் சமீபத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, அப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் கண்காணிப்பாளர் ரவி, கூடுதல் கண்காணிப்பாளர் பாலமுருகன், ஆய்வாளர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்த கோயிலில் பக்தர்கள் வழிபட்டு வந்தது போலி சிலை என்பதும், ஏற்கெனவே இருந்த உண்மையான சிலைக்கு பதிலாக இது வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு அருங்காட்சியகங்கள், கலைப் பொருள் சேகரிப்பாளர்கள் வைத்திருந்த பொருட்கள், ஏல மையங்களின் வலைதளங்கள் என பலவற்றையும் தீவிரமாக ஆய்வு செய்த தனிப்படையினர், திருவேதிக்குடி நடராஜர் சிலை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்தனர். யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி, அந்த நடராஜர் உலோக சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்டு, தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சிலை மாயமானது குறித்து தற்போது புகார் கொடுத்துள்ள வெங்கடாச்சலம் (60), திருவேதிக்குடி கிராமத்தை சேர்ந்தவர். காணாமல் போன அந்த சிலையை கண்டுபிடித்து தருமாறு இவரது தந்தை சேதுராயரும் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு நடுக்காவேரி காவல்நிலையத்தையும், பல்வேறு அதிகாரிகளையும் அணுகியுள்ளார். ஆனால், போலீஸார் அப்போது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்தும், நடராஜர் சிலையை தன்னால் மீட்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் மனமுடைந்த அவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டு வருவதை அறிந்து, தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் நோக்கில் தற்போது புகார் கொடுத்துள்ளதாக திருவேதிக்குடி முதியவர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

மேலும் கோவிலில் வேறு ஏதேனும் சிலைகள் திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...