புதிய கட்சி துவக்கினார் காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் – மக்களுக்கு அழைப்பு..!
காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 73, தன் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை வேகப்படுத்தி உள்ளார். புதிய கட்சியை துவக்குவதாக அறிவித்துள்ள அவர், அதற்கான பெயர் மற்றும் கொடியை மக்கள் தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார்; தனிக் கட்சி துவக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஜம்முவில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் புதியக் கட்சியை துவக்குவதாக அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:ஜம்மு – காஷ்மீர் முதல்வராக, 2005 – 2008 வரை இருந்தேன். இந்த மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை உறுதி செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்த முயன்றேன். ஆனால், கூட்டணியில் இருந்து மக்கள் ஜனநாயகக் கட்சி விலகியதால், முதல்வர் பதவியை இழந்தேன்.ஜம்மு – காஷ்மீர் மக்களுக்காக உழைப்பதற்காக புதிய கட்சியை துவக்க முடிவு செய்துள்ளேன்.
இது, தேசிய அளவிலான கட்சியாக இருக்கும். முதலில் ஜம்மு – காஷ்மீரில் துவக்குகிறேன். சட்டசபைக்கு அடுத்து நடைபெறும் தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் சேவையை தொடருவேன். ஏற்கனவே பாதியில் நின்ற என் பணிகளை தொடருவேன். இது மக்களுக்கான கட்சி. அதனால் கட்சியின் பெயர், சின்னத்தை மக்களே முடிவு செய்வர். தேசிய அளவில் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்துஸ்தானி பெயர் வைக்கப்படும்.சில விரும்பத்தகாத சம்பவங்களால் காங்கிரசில் இருந்து விலக நேரிட்டது. நம் ரத்தத்தால் உருவானது அந்தக் கட்சி; கம்ப்யூட்டர்களால், சமூக வலைதளங்களால் அல்ல. ஆனால், தற்போது அவற்றை மட்டுமே கட்சித் தலைமை நம்புகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் மோசமான நிலைமையை நாம் பார்த்து வருகிறோம். இந்த எட்டு ஆண்டுகளில் நடந்த, 49 சட்டசபை தேர்தல்களில், 39ல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தற்போது இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்., ஆட்சி உள்ளது. அதையும் இழப்பதற்கு முன், நாம் நம் வீட்டைக் கட்டுவோம்.
அந்த வீடான நம் புதிய கட்சியை செங்கற்களால் கட்டுவோம்; மண்ணால் அல்ல. ஆனால், தேசியக் கட்சியான காங்கிரஸ், தற்போது மண்ணால் கட்டப்பட்டு வருகிறது.ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, நில உரிமை மற்றும் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை போன்ற உரிமைகளை பெற்றுத் தருவேன்.இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...