சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி கைது.!
கர்நாடகாவின் சித்ரதுர்காவில் ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) இரவு மடத்தில் வைத்து சிவமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சித்ரதுர்கா எஸ்பி பரசுராமன், சிவமூர்த்தி கைதை உறுதி செய்தார். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ்பி தெரிவித்தார். முன்னதாக மடாதிபதியை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு தலித் அமைப்புகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. காவல்துறையும் மாநில அரசும் இவ்வழக்கில் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினர்.
சித்ரதுர்கா துணை ஆணையரின் காரை மறித்து பாரதிய தலித் சங்கர்ஷ சமிதி போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது பேசிய அந்த அமைப்பின் நிறுவனர் எச்.பிரகாஷ் பீரவரா, “மடாதிபதி மடத்தில் தான் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைக் கைது செய்வதிலிருந்து போலீஸைத் தடுப்பது எது? காவல்துறையினர் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது” எனக் கூறினார்.
காவல்துறையினர் கூறுகையில், “சிவமூர்த்தி முருகா சரணரு நேற்று இரவு 10 மணியளவில் மடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது பக்தர்களை சந்தித்த பிறகு கைது செய்யப்பட்டார். துணை எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு எதிராக போலீசார் ஏற்கனவே லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டனர்” என்றனர். முன்னதாக நேற்று, சிவமூர்த்தி முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் இன்றைக்கு ஒத்திவைத்தது.
2 சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், ஆகஸ்ட் 26 அன்று, மைசூரு காவல்துறையினர் சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஜனவரி 2019 முதல் ஜூன் 2022 வரையிலான காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சிறுமிகள் மாநில குழந்தைகள் நலக் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. லிங்காயத் சமூகத்தின் வாக்குகளை பெறும் முயற்சியில் அரசியல் தலைவர்கள் மடத்திற்கு வந்து செல்கின்றனர். அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மடத்திற்கு சென்று சிவமூர்த்தி இடமிருந்துங தீக்ஷை பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மடாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் “பொய்” எனக் கூறினார்.
Leave your comments here...