கஞ்சா விற்பனை : 8 மாதத்தில் 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு – சொத்துக்கள் முடக்கம்
தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறை இயக்குநரின் உத்தரவின் பேரில் மதுரை மாநகர காவல் ஆணையரின் தீவிர கண்காணிப்பில் மதுரை மாநகர காவல்துறையால் கஞ்சா விற்பனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள தகவலில், நடப்பு ஆண்டில் மட்டும் 274.137கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 137 கஞ்சா விற்பனையாளர்கள் மீது நன்னடத்தை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிணையப் பத்திரத்தை மீறிய நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தகத்தைச் சோதனை செய்து அங்கிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, மேற்படி மருந்தகம் சீல் வைக்கப்பட்டதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மருந்தகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த வருடம் 4 வணிக அளவு கஞ்சா வழக்குகளில் நீதிமன்ற விசாரணையில் கவனம் செலுத்தி 13 குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மதுரை மாநகர காவல் துறை, மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்யும் 68 குற்றவாளிகளின் சுமார் 67 இலட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 8 கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களின் அசையா சொத்துக்கள் முடக்க நடவடிக்கைக்காக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ, அதற்கு அருகிலேயோ மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக இருக்கும்பட்சத்தில் அந்த தகவல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகித்தனர் மற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விவரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கக்கூடிய இந்த எண்ணில் தெரியப்படுத்தலாம்.
அதன்படி, மதுரை – 94981 81206, விருதுநகர் – 94439 67578, திண்டுக்கல்- 85258 52544, தேனி- 93440 14104, ராமநாதபுரம் – 83000 31100, சிவகங்கை- 86086 00100, நெல்லை- 99527 40740, தென்காசி- 93856 78039, தூத்துக்குடி – 95141 44100, கன்னியாகுமரி – 70103 63173 என்ற எண்களில் மாவட்டம் வாரியாக தொடர்பு கொள்ளலாம். தகவல் தரும் நபர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். புகார்கள் தெரியப்படுத்தும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...