உலகில், அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது – மன் கி பாத்’ நிகழ்ச்சியில் தொல்காப்பியம், புறநானூறை மேற்கோள்காட்டி பிரதமர் உரை..!
பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது.
இதில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அன்று, நாடு முழுவதும், அனைத்து நகரங்கள், கிராமங்களில் அமிர்த மஹோத்சவ் கொண்டாட்டத்தை காண முடிந்தது. நாட்டின் கூட்டு முயற்சியை நாம் பார்த்தோம். பெரிய நாட்டில், பன்முகத்தன்மை உள்ள போதும், தேசிய கொடி ஏற்றப்பட்ட போது, அனைவரும் ஒரே உற்சாகத்துடன் காணப்பட்டனர். தூய்மை பிரசாரம் மற்றும் தடுப்பூசி இயக்கத்திலும் மக்களின் உற்சாகத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அதேபோன்று தேசப்பற்றில், மக்களின் உற்சாகத்தை அமிர்த மஹோத்சவ்வில், மீண்டும் பார்க்க முடிந்தது.
நாட்டின் எல்லை, நடுக்கடல் மற்றும் மலை உச்சியில் நமது வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றினர். அமிர்த மஹோத்சவ்வின் உற்சாகத்தை இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மற்ற நாடுகளிலும் பார்க்க முடிந்தது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, போட்ஸ்வானாவை சேர்ந்த பாடகர்கள் 75 தேசப்பற்று மிக்க பாடல்களை பாடினர். இந்த பாடல்கள், ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்கம், அசாமி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பாடப்பட்டது. இந்தியா நமீபியாவின் கலாசார பாரம்பரிய உறவை பிரதிபலிக்கும் வகையில் நமீபியாவில் சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது.
தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நீரை பாதுகாப்பது குறித்து நமது கலாசாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது. அவை இன்றைக்கும் பொருந்துவது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. தேசம் இதனை தனது பலமாக ஏற்றுக்கொள்ளும்போது அதன் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நாட்டிற்காகவும், ஒருவரின் கடமையாகவும், வருங்கால சந்ததிக்காகவும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நீர்நிலைகளை பாதுகாக்கும், புதுப்பிக்கும் அம்ரீத் சரோவர் குறித்து பேசியிருந்தேன். அதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் பல மாவட்டங்களில் அது குறித்து தீவிரம் காட்டியதுடன், பல தன்னார்வ அமைப்புகள் இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது.
தெலுங்கானாவின் வாராங்கல்லில் உள்ள கிராம பஞ்சாயத்து, கர்நாடகாவின் பகல்கோட்டில் உள்ள பில்கெரூர் கிராமம், ம.பி.,யின் மண்ட்லா மாவட்டத்தில் உள்ள மோசா கிராம பஞ்சாய்த்து, உ.பி.,யின் லலித்பூரில் நிவாரி கிராம பஞ்சாயத்து போன்றவற்றில் அம்ரீத் சரோவர் பெரிய அளவில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, நீர்நிலைகள் , ஏரி, குளங்கள் பாதுகாக்கப் பட்டன. அதனை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால், மழை பெய்த போது நீர்நிலைகள் நிரம்பின. இதனால், விவசாயிகள், மக்கள் பயனடைந்தனர். அமித் சரோவர் அபியான் இயக்கம், பல பிரச்னைகளுக்கு தீர்வை மட்டும் தருவதில்லை. எதிர்கால சந்ததியினருக்கு முக்கியமானது. அதில், இளைய தலைமுறையினர் இணைய வேண்டும். பருவமழை காலத்தில் இயற்கை அளிக்கும் கொடையான மழைநீரை பாதுகாக்க வேண்டும்.
வரும் 2023ம் ஆண்டு, சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக கொண்டாடுப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்குறிப்பிட்டு, சென்னையை சேர்ந்த ஸ்ரீதேவி வரதராஜன் என்பவர், கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தியாவின் சிறுதானியம் தொடர்பான விவரங்களை கூறியுள்ள அவர், மன் கி பாத்தில் சிறுதானியங்கள் குறித்து பேச வேண்டும் எனக்கூறியிருந்தார். 2023ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதனை இந்தியா முன்மொழிந்தது. 70 நாடுகள் ஏற்றுக்கொண்டன. சிறுதானியங்கள், பருப்பு வகைகள் நமது விவசாயத்திலும், கலாசாரம் மற்றும் பண்பாடு ரீதியாகவும் ஒரு அங்கமாக உள்ளது.
சிறுதானியங்கள் குறித்து நமது வேதங்கள், புறநானூறு, தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுதானியங்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது. உலகில், அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதில் இந்தியர்களின் பொறுப்பாகும். நாம் அனைவரும் சேர்ந்து சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள் இயக்கமாகவும் மாற்றவும் வேண்டும்.சிறுதானியங்கள் சிறுவிவசாயிகளுக்கு நல்ல பயன்தரும். இந்த பயிர்கள் குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படுவதால், அதிக தண்ணீர் தேவைப்படாது. சிறுதானியங்கள் சிறந்த உணவாகவும் கருதப்படுகிறது.
இன்றைய தலைமுறை ஆரோக்கியமாக வாழவும், சாப்பிடவும் கவனம் செலுத்துகின்றனர். இந்த வகையில் சிறுதானியத்தில் ஏரளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த உடல் ஆரோக்கியத்துக்கு சிறுதானியங்கள் முக்கியமானவை. பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும் திறன் கொண்டவை. சிறுதானியங்களால் ஏராளமான பயன்கள் உள்ளன. இது உடல் எடையை குறைக்கவும், நீரழிவு அபாயத்தை தடுக்கவும், ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கு தீர்வை தருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதில் சிறுதானியங்கள் பயன்தரும். நாட்டில் சிறுதானியங்களை முன்னெடுத்து செல்ல ஏராளாமான பணிகள் நடக்கின்றன.
பெரிய நகரங்களில் மட்டும் கிடைத்த வசதிகள், டிஜிட்டல் இந்தியா மூலம் கிராமப்புறங்களிலும் கிடைக்கிறது. இதனால், ஏராளமான டிஜிட்டல் தொழில்முனைவோர்கள் உருவாகுகின்றனர். கிராமப்புற மக்கள் பல்வேறு தொழில் துவங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
Leave your comments here...