பஞ்சத்தில் தவித்த பாரதம் இன்று உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது – சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதம்..!
“சுதந்திரத்திற்கு முன்பு பல கொடுமையான பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும் 75 ஆண்டுகளில் உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது” என ஈஷா சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதத்துடன் கூறினார். ஆதியோகி முன்பு நடைபெற்ற இவ்விழாவில் காமென்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்காட்லாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இவ்விழாவில் சத்குரு பேசுகையில், “பஞ்சத்தில் தவித்த நம் தேசம் இப்போது உலகிற்கே உணவு அளிக்கும் நிலையை அடைந்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மை நாடாக நம் நாடு உருவெடுத்துள்ளது. உலகின் 30 சதவீத அரிசி ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடக்கிறது.
75 years of Independence! What a momentous day. Wonderful to celebrate with our dear guests – Secretary-General of the Commonwealth Ms. @PScotlandCSG & Shri. @HarshShringla, G20 Chief Coordinator, Govt of India. -Sg #IndiaAt75 #IDAY2022 #IndiaIndependenceDay#AmritMahotsav pic.twitter.com/h7FQn3rtoX
— Sadhguru (@SadhguruJV) August 15, 2022
அதேபோல், 1947-ல் நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் 28 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், இப்போது அது 70 ஆண்டாக உயர்ந்துள்ளது. 2030-க்குள் இது 80 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது சாதாரணமான விஷயம் அல்ல. பலருடைய தியாகங்களாலும், அர்ப்பணிப்பு மற்றும் உறுதியாலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகி
உள்ளது.
உலகளவில் பொருளாதார வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் உள்நிலையில் அமைதியாக, ஆனந்தமாகவும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியால் பயன் இருக்காது. அது நமக்கும் நம்மை சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் அழிவை மட்டுமே உருவாக்கும். எனவே, பொருளாதாரம், வணிகம் மற்றும் அரசியல் என எதுவாக இருந்தாலும், அது மக்களின் நல்வாழ்வை
மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்” என்றார்.
பிரதமரின் வேண்டுகோள்படி, சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை ஏற்றுவது குறித்து உங்கள் கருத்து என்ன என நிருபவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சத்குரு பதில் கூறுகையில், “தேசப் பற்று உணர்வு நம் இதயங்களிலும் மனங்களிலும் துடிக்க வேண்டும். இந்த உணர்ச்சி இல்லாவிட்டால் நாம் நம் நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியாது. உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள ஒற்றுமையே நாம் இந்தப் பாரத தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான். எனவே இந்த நாடு முன்னேற வேண்டுமானால், அனைவருடைய இதயங்களிலும் தேசப் பற்று உணர்வு துடிக்க வேண்டும்.” என்றார்.
காமென்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்காட்லாந்த் பேசுகையில், “இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் பட்டேல் ஆகிய தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியா உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாடாக திகழ்கிறது. இந்தியாவில் 2 பெண்கள் குடியரசு தலைவர்களாகவும், ஒருவர் பிரதமராகவும், ஏராளமான பெண்கள் முதலமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். மற்ற பழமையான ஜனநாயக நாடுகளில் கூட இது இன்னும் சாத்தியமாகவில்லை.
உலகளவில் பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதை எதிர்கொள்வதில் இந்தியாவின் தலைமையை காவென்வெல்த் எதிர்ப்பார்க்கிறது. அந்த வகையில் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அவர் மேற்கொண்ட 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் உலகளவில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
இவ்விழாவில் ஜி 20 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளருமான திரு.ஹர்ஸ் வர்தன் ஸ்ரிங்லா அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசுகையில், “இந்தியா பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. காவென்வெல்த் பொதுச் செயலாளர் குறிப்பிட்டதை போல், உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இன்னும் 4 ஆண்டுகளுக்குள் நாம் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டிவிடுவோம். இந்தாண்டு ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது. இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 190 சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அதில் ஒரு நிகழ்ச்சி ஈஷாவில் நடக்க உள்ளது” என்றார்.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்றனர். ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Leave your comments here...