“ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம்” – காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு..!

இந்தியாவிளையாட்டு

“ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம்” – காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு..!

“ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம்” – காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு..!

காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தப் பாராட்டு நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், நிஷித் பிரமானிக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு 2022-ன் பல்வேறு போட்டிகளில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களை வெல்லும் அளவிற்கு அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.


பின்னர் விளையாட்டு வீரர், வீராங்கணைகள் மற்றும் பயிற்சியாளர்களை வரவேற்றுப் பேசிய பிரதமர், காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் இந்திய வீரர், வீராங்கணைகளின் சாதனைகள் மிகுந்த பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். கடந்த சில வாரங்களில், விளையாட்டுத்துறையில் இந்தியா, இரண்டு மாபெரும் சாதனைகள் படைத்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் படைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன், செஸ் ஒலிம்பியாட் போட்டியையும் இந்தியா முதன்முறையாக நடத்தியுள்ளது.


தடகள வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர், “நீங்கள் அனைவரும் பர்மிங்ஹம் போட்டியில் பங்கேற்றிருந்தபோது, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் நள்ளிரவிலும் கண் விழித்திருந்து, உங்களது ஒவ்வொரு செயல்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர். போட்டி முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக, பலர் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டுத்தான் உறங்கினர்“ என்றார். இந்திய அணியினரை வழியனுப்பியபோது தாம் வாக்குறுதி அளித்தபடி, இன்றைய தினம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்திய அணியினரின் சிறப்பான செயல்பாட்டை சுட்டிக்காட்டிய பிரதமர், பல போட்டிகளில் நூல்இழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டாலும், பின்னர் அவர்கள் உடனடியாக அதனைத் திருத்திக் கொண்டதால், பதக்க எண்ணிக்கை என்பது செயல்திறனை முழுமையாக பிரதிபலிக்காது என்றும் கூறினார். முந்தைய போட்டியுடன் ஒப்பிடுகையில், 4 புதிய விளையாட்டுகளில், வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். லான் பவுல் முதல் தடகளம் வரை, நமது வீரர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர்.

இந்த செயல்பாடு மூலம், இதுபோன்ற புதிய விளையாட்டுக்களில் ஈடுபாடு காட்டும் சூழல், இந்தியாவில் பெருமளவு அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். குத்துச்சண்டை, ஜுடோ, மல்யுத்தப் போட்டிகளில் சாதனைபடைத்த இந்திய மகளிர் அணி, ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் ஆதிக்கம் செலுத்தியதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். முதன்முறையாக களமிறங்கிய வீரர்கள் 31 பதக்கங்களை வென்றிருப்பது, இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருவதைப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார். பதக்கம் பெற்றுத் தந்ததோடு மட்டுமின்றி, அதனைக் கொண்டாடுவதற்கும், பெருமிதம் அடைவதற்கும் வாய்ப்பு அளித்ததன் மூலம், ‘ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம்‘ என்பதற்கு நமது விளையாட்டு வீரர்கள் வலிமையூட்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். விளையாட்டு மட்டுமின்றி பிற துறைகளிலும் சாதனை படைக்க வேண்டுமென்ற உணர்வை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தி இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.


‘‘கருத்தொற்றுமை மற்றும் ஒருமித்த குறிக்கோளுடன் நீங்கள் நாட்டை பிணைத்திருப்பதும், நமது சுதந்திரப் போராட்டம் அளித்த சிறந்த வலிமைகளில் ஒன்றாகும்“ என்றும் அவர் கூறினார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்தாலும், சுதந்திரம் அடைவது என்ற பொதுவான குறிக்கோளுடன் அவர்கள் நட்சத்திர மண்டலம் போன்று செயல்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அதேபோன்று, நமது விளையாட்டு வீரர்களும், நாட்டின் கவுரவத்தைக் காக்க களமிறங்கினர். உக்ரைன் போர்க்கள பகுதியில் இருந்து வெளியே வருவதற்கு, இந்தியர்களுக்கு மட்டுமின்றி, பிற நாட்டினருக்கும் நமது மூவண்ணக் கொடி பாதுகாப்புக் கவசமாக திகழும் அளவிற்கு வலிமை பெற்றிருந்ததைக் காண முடிந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா விளையாட்டு மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்கள், தற்போது சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருப்பது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒலிம்பிக் பதக்க மேடையை இலக்காகக் கொண்ட TOPS திட்டம், ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்தியிருப்பதை, தற்போது காண முடிவதாகவும் அவர் கூறினார். புதிய திறமைசாலிகளை அடையாளங்கண்டு, அவர்கள் பதக்கம் வெல்வதற்கான பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “உலகிலேயே மிகச்சிறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல்மிக்க விளையாட்டுச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது“ என்றும் அவர் வலியுறுத்தினார். பயிற்சியாளர்கள், விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் களப் பணியாளர்களின் ஒத்துழைப்பும், வீரர்களின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அடுத்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆயத்தமாகுமாறும் விளையாட்டு வீரர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவையொட்டி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், நாட்டிலுள்ள 75 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று, குழந்தைகளை சந்தித்து அவர்களை ஊக்குவிக்குமாறு, கடந்த ஆண்டு தாம் கேட்டுக் கொண்டிருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான வீரர், வீராங்கணைகள் இந்த வேண்டுகோளை ஏற்று ‘சாம்பியனை சந்திப்பீர்‘ என்ற இயக்கத்தை நிறைவேற்றியதாகவும் பிரதமர் கூறினார். விளையாட்டு வீரர்களை தங்களது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள இளைஞர்கள் விரும்புவதால், அதுபோன்ற இயக்கத்தை தொடர்ந்து செயல்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். ‘‘உங்களுக்கான அங்கீகாரம், வல்லமை மற்றும் உங்களை ஏற்றுக்கொள்வோர் அதிகரித்து வருவதை, நாட்டின் இளைய தலைமுறையினருக்காக பயன்படுத்துங்கள்‘‘ என்றும் பிரதமர் வலியுறுத்தினார். வீரர்களின் ‘‘வெற்றிப் பயணம்‘‘ தொடரவும், வருங்காலப் போட்டிகளில் வெற்றிபெறவும் நல்வாழ்த்துக்களைக் கூறி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கச் செய்யும் தமது தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமரின் இந்தப் பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினர் மற்றும் டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருடனும், கடந்த ஆண்டு பிரதமர் இதேபோன்று கலந்துரையாடினார். காமன்வெல்த் விளையாட்டு 2022-ன்போதும், வீரர்களின் முன்னேற்றத்தில் சிறப்புக் கவனம் செலுத்திய பிரதமர், போட்டிகளில் அவர்களது வெற்றிக்கும், அக்கறையுடன் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்ததோடு, மேலும் சிறப்பாக செயல்படவும் அவர்களை உற்சாகப்படுத்தினார். காமன்வெல்த் விளையாட்டு 2022, பர்மிங்ஹாமில் 28ஜுலை முதல் 08 ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்றது.

இந்தியாவின் சார்பில், 19 விளையாட்டுப் பிரிவுகளில் நடத்தப்பட்ட 141 போட்டிகளில் மொத்தம் 215 வீரர் – வீராங்கணைகள் கலந்துகொண்டு, 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...