மீண்டும் பரபரக்கும் குட்கா ஊழல் வழக்கு – விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிய சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம்..!
குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த 2016ம் ஆண்டு செங்குன்றம் அருகே குட்கா குடோனில் கைப்பற்றப்பட்ட டைரி மூலமாக இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது. குறிப்பாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், சுகாதாரம், பாதுகாப்பு, கலால் துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றன.
இது குறித்து முதலில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த சிபிஐ 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐயை தொடர்ந்து சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் 2018ம் ஆண்டு களத்தில் இறங்கியது. அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 27 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. அதோடு குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு சொந்தமான 246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் சிபிஐ இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தால் இந்த வழக்கில் சிபிஐ 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave your comments here...