காவல் உதவி செயலி ஆப்பை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை – கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது. சாலை விதிகள் அதன் முக்கியத்துவம், காவல் உதவி செயலி , காவல்துறை உங்கள் நண்பன், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து இருந்தனர். அந்த ஓவியங்கள் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது காவல்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியப்போட்டி நடத்தப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை மாணவர்கள் வரைந்து அனுப்பி உள்ளனர். இதை ஒரு குழுவினர் ஆய்வு செய்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் காவல் உதவி செயலி என்ற ஆப்பை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.போலீஸ் நிலையங்களுக்கு நேரில் வந்து புகார் அளிப்பதை விட காவல் உதவி செயலி என்ற ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
அனைவரும் உடனடியாக உங்களது செல்போனில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதில் அளிக்கப்படும் புகார்கள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கூட செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...