தேசிய சின்னம் அவமதிப்பு : அசோக சின்னத்தில் உள்ள சிங்கத்தை மாற்றியமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..!

இந்தியா

தேசிய சின்னம் அவமதிப்பு : அசோக சின்னத்தில் உள்ள சிங்கத்தை மாற்றியமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..!

தேசிய சின்னம் அவமதிப்பு : அசோக சின்னத்தில் உள்ள சிங்கத்தை மாற்றியமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில், பிரதமர் மோடி திங்கள்கிழமை திறந்து வைத்த பிரம்மாண்ட தேசிய சின்னமானது மாற்றியமைக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை திங்கள்கிழமை (ஜூலை 11) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது உண்மையான சிங்கள் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள மோடியினுடைய சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமலும் இருக்கின்றன. அதனை உடனே மாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி.யான மஹூவா மொய்த்ரா, அசோகரின் சிங்கத்தின் படத்தையும், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்தின் படத்தையும் அருகருகே பதிந்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள் அதன் மென்மையான வெளிப்பாட்டிற்காக பெயர் பெற்றவை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலையில் உள்ள சிங்கங்கள் மனிதனை உண்ணும் தன்மையில் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்: புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தின் வெண்கல உருவம் காங்கிரஸ், சிபிஐ (எம்), ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் விமர்சித்துள்ளன.“இது, அரசியல் சாசனம் அளித்திருக்கும் நாடாளுமன்றத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையில் இருக்கும் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது” என்று விமர்சிக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக சாடியுள்ளது. “எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற மற்றொரு குற்றச்சாட்டைக் கூறுவது அவர்களின் அரசியல் நோக்கத்தையே காட்டுகிறது” என்று பாஜகவின் தேசிய ஊடக பொறுப்பாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான அணில் பலுனி தெரிவித்துள்ளார்.

Leave your comments here...