தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் 2.10 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்..!
தேசிய அளவில் கொண்டாடப்படும் வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் 2.10 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்கள் நடவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் வன மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தென்காசி 37 மாவட்டங்களில் சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களில் 2.10 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டது.
சுற்றுக்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, ரோஸ்வுட் போன்ற மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். காவேரி கூக்குரல் இயக்க களப்பணியாளர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாக சென்று மண்ணின் தன்மை, நீரின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற டிம்பர் மரங்களை பரிந்துரை செய்தனர். மேலும், மரம் நடும் வழிமுறைகளையும் இலவச ஆலோசனையாக வழங்கி வருகின்றனர்.
வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது வருவது குறிப்பிடத்தக்கது.
காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்.
இவ்வியக்கத்தின் மூலம் நடப்படும் அனைத்து மரங்களும், விவசாய நிலங்களில் நடப்படுவதால், அவற்றை விவசாயிகள் நன்கு பராமரித்து வருகின்றனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் வனப் பகுதிக்கு வெளியில் இருக்கும் இடங்களில் (Trees outside forest) லட்சக்கணக்கில் மரங்களை நட்டு பசுமை பரப்பை அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது போன்ற பணிகளில் ஈஷா முக்கிய பங்காற்றி வருகிறது.
Leave your comments here...