அயோத்தி தீர்ப்பின் மீது முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யும் முடிவுக்கு மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு.!
அயோத்தி, ராமஜென்மபூமி நில விவகாரத்தில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் எனவும், முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக, ஜாமியத் உலேமா இ ஹிந்து அமைப்பும், முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதாக அறிவித்துள்ளன.இந்த விவகாரத்தில் சன்னி வக்பு வாரிய முடிவு தங்களை சட்டப்படி கட்டுப்படுத்தாது எனவும், அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதாகவும், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது : ”அயோத்தி நில விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தால், சமூகத்தில் பிரிவினையும் மோதலும் தேவையில்லாமல் உருவாகும். ஜனநாயகத்தில், ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை கூறவும், நீதிமன்றத்தை நாடவும் உரிமை உள்ளது. ஆனால், நூற்றாண்டு காலமாக சிக்கலில் இருந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் அனைவரும் ஏற்கும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.தீர்ப்பை அனைவரும் ஏற்கிறார்கள். மதிக்கிறார்கள். ஆனால், இந்த தீர்ப்புக்கு பின் ஒற்றுமை பலமாகி இருக்கிறது என்ற உண்மையை சிலரால் சகித்து கொள்ள முடியவில்லை. இதனால், சீராய்வு மனு என்ற பெயரில் சமூகத்தில் பிரிவினையையும், மோதலையும் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இது சமூகத்தால் ஏற்கப்படாது. தனிப்பட்ட சிலரின் குரல்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாகாது. அனைத்து தரப்பினரின் உணர்வுகளும் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவில் இருப்பவர்கள் இந்த தீர்ப்பை ஏற்று கொள்ளாவிட்டால், நீதிமன்றம் ஏற்கனவே அளித்த சமரசம் என்ற வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாமே. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஹிந்து தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் ஏற்று கொண்டுள்ளார்கள். சீராய்வு மனு தாக்கல் செய்ய போகிறோம் என்பவர்கள், தொடக்கத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றனர். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை . தற்போது எதிரான நிலையை எடுத்துள்ளனர் என கூறினார்..!
Leave your comments here...