ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு..!

தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு..!

ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு..!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடிக்கடி விஷவாயு கசிந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 2018 மே 22, 23ம் தேதி மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

இதனையடுத்து நடந்த தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதன் எதிரொலியாக தமிழக அரசின் அரசாணை மூலம் ஸ்டெர்லைட் ஆலை 2018ம் ஆண்டு மே 28ம் தேதி முதல் மூடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 2020ம் ஆண்டு வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனுவைச் சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக கடந்த ஆண்டு 3 மாதத்திற்கு மட்டும் ஆலை இயங்கியது. மக்களின் எதிர்ப்பு, அரசின் அறிவிப்பால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விற்பனை தொடர்பாக செய்தித் தாளில் வேதாந்தா குழுமம் விளம்பரம் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...