திருப்பதி கோவில் மாட வீதியில் “செருப்பு” அணிந்த சர்ச்சை : மன்னிப்பு கேட்டு தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம்!
திருப்பதி மாடவீதியில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் செருப்புடன் நடந்ததாக எழுந்த சர்ச்சை எழுந்தநிலையில், அது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோயில் வளாகத்தில் போட்டோ எடுத்தபோது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்த பின் நேற்றைய தினம் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி கோவில் முன் போட்டோ ஷூட் நடத்தினார்கள்.அப்போது அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள அந்தப்பகுதியில் காலணியுடன் போட்டோ ஷூட் நடத்தியது பெரும் விவாதமாக மாறியது.
இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றிய செய்திகள் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் இதுபற்றி தொலைபேசி மூலம் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இது தெரியாமல் நடந்த தவறு. எனவே நடந்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் வகையில் கடிதம் அல்லது வீடியோ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வெளியிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் இரண்டு பேரும் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையான் சுப்ரபாதம் சேவையில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே திருப்பதி மலையில் அவர்களை சந்தித்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் நடந்த தவறு பற்றி விசாரணை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு அனுப்பியிருக்கும் கடிதம் ஒன்றில்,”திருமணம் நடந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம். அதன்பின் கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர்.
எனவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம். எங்களைப் பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். இதனால் ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம்.
இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். திருப்பதி மலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கடந்த ஒரு மாதத்தில் 5 முறை திருப்பதி மலைக்கு இரண்டு பேரும் வந்திருக்கிறோம். பல்வேறு காரணங்களால் திருப்பதி மலையில் எங்கள் திருமணத்தை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது” என்று விக்னேஷ் அதில் கூறியிருக்கிறார்.
Leave your comments here...