திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய தமிழக தொழிலதிபர்கள்…!
- June 8, 2022
- jananesan
- : 751
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ. 10 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர் திருநெல்வேலி பக்தர்கள். திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் அதிகபட்சமாக வழங்கப்பட்ட நன்கொடை இது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான கோவில் உலக பிரசித்தி பெற்ற வழிப்பாட்டு தளமாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய ஆந்திரா, தமிழ்நாடு, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் முதலிடத்தில் உள்ளது. கோவில் சார்ந்த பணிகளை திருப்பதி தேவஸ்தானம் முறைப்படி கவனித்து கொள்கிறது.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மூலமாகவும் தேவஸ்தானம் வழியாகவும் நன்கொடைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் திருப்பதி உண்டியலில் நாள் ஒன்றுக்கு ரூ. 4 கோடி வரை காணிக்கை பெறப்படுவதாக கூறப்படுகிறது. இந்த உண்டியல் காணிக்கை மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,500 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுதவிர பக்தர்கள் பல வழிகளில் தங்களது காணிக்கையை வழங்கி வருகின்றன. அதாவது., தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்களை வழங்குவது. தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக ரொக்கமாக வழங்குவது ,இ – உண்டியல் முறை என பல வழிகளில் நாள்தோறும் கோடிக்கணக்கில் திருப்பதி ஏழுமலையானுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கையில், நேற்றைய தினம் ( 7.6.22) திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபரும் பக்தருமான கோபால் பாலகிருஷ்ணன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான திட்டம், கோ சம்ரக் ஷன திட்டம், தேவஸ்தான எலும்பு சிகிச்சை மருத்துவமனை வேத பரிரத்ஷன அறக்கட்டளை, அன்னபிரசாத திட்டம், சர்வ ஸ்ரேயாஸ் திட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் என மொத்தம் 7 திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ-ஸ்டார் டெஸ்டிங் அண்ட் இன்ஸ்பெக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தேவஸ்தான வித்யாதன திட்டத்துக்கு ரூ.1 கோடி, பாலகிருஷ்ணா பெட்ரோல் பங்க் சார்பில் கோயில் கட்டும் திட்டத்துக்கு ரூ. 1 கோடி, ஸீ-ஹப் இன்ஸ்பெக் ஷன் சர்வீசஸ் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரம்பரிய அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் திருநெல்வேலி பக்தர்கள் ஒரே நாளில் ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை பெறப்படுவது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.
Leave your comments here...