தற்சார்பு இந்தியா திட்டம் – ரூ.76,390 கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய அரசு அனுமதி
மத்திய அரசு, 76 ஆயிரத்து 390 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் சாதனங்களை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கிஉள்ளது.ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்க, பல்வேறு ஊக்கச் சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாடக் கொள்முதல் குழு, 76 ஆயிரத்து 390 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடக் கொள்முதலுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறிய போர்க் கப்பல்கள் வாங்கப்படும்.
இந்த கப்பல்கள், பெரிய போர்க் கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்லும். அத்துடன் கடலோர பாதுகாப்பு, கண்காணிப்பு, எதிரிகளை தாக்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டார்னியர்’ போர் விமானம், ‘சுகோய் – 30’ விமான இன்ஜின் ஆகியவற்றின் கொள்முதலுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, கடுமையான மலைப் பகுதிகளில் செல்லும் டிரக்குகள், பாலம் அமைக்க உதவும் டாங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கூடிய வாகனங்கள், ஆயுதங்களை கண்டுபிடிக்கும் ‘ராடார்’கள் ஆகியவற்றை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் ‘டிஜிட்டல்’ மயமாக்கி ஒருங்கிணைக்கும் பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது
Leave your comments here...