‘ஜிம்’மில் கடும் உடற்பயிற்சி செய்த 27 வயது இளைஞர் பலி..!
- June 7, 2022
- jananesan
- : 688
- Gym workout
மதுரையில் ‘ஜிம்’மில் கடும் உடற்பயிற்சி செய்த ஸ்ரீவிஷ்ணு 27, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் கமலேஸ்வரன். இவரது மகன் ஸ்ரீவிஷ்ணு. ஐ.டி., தொழில் செய்து வந்தார். தினமும் மாடக்குளம் ‘பிட்னஸ்’ சென்டரில் உடற்பயிற்சி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு கடுமையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை இருதயவியல் டாக்டர் அமுதநிலவன் கூறியதாவது: இளவயதினருக்கு மூன்று காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம். இருதயத்திற்கு செல்லும் ரத்தநாளங்களுக்கு கொரோனரி (CORONARY) என்று பெயர். இதனுள் 3 விதமான லேயர் இருக்கும். சிலருக்கு பிறவியிலேயே ரத்தநாளம் ‘வீக்’ ஆக இருக்கும். அவர்கள் கனமான பொருட்களை அதிக அழுத்தம் கொடுத்து துாக்கும்போதோ, முக்கும் போதோ இருதயத்திற்கு அழுத்தம் ஏற்படும். அழுத்தம் தாங்காமல் ரத்தநாளம் லேயர் கிழிந்துவிடும். இதற்கு DISSECTION என்று பெயர்.கிழிந்த பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி அது கட்டியாக மாறி ரத்தநாளங்களை அடைக்கும்போது மாரடைப்பு ஏற்படும்.
இருதய தசைகளும் ‘வீக்’ ஆக இருக்கும்பட்சத்தில் உடனடியாக இருதய துடிப்பு நின்று இறப்பை ஏற்படுத்தும். இதற்கு CARDIAC ARREST என்று பெயர்.இரண்டாவது காரணம் மூளையில் ரத்தக்குழாய் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம். மூளையில் ரத்தக்குழாய் பெரிதாக இருக்கும். இதற்கு ANEURYSM என்று பெயர். ‘பிரஷர்’ கொடுக்கும்போது ரத்தக்குழாய் வெடித்து இறந்துவிடுவர்.
மூன்றாவது காரணம், ஸ்டீராய்டு மருந்து. சில பாடி பில்டர்ஸ் தாங்கள் ‘பிட்’ ஆக இருக்க ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்துவர். அவர்களுக்கு ரத்தநாளங்கள் ‘வீக்’ ஆக இருக்கும். ரத்தம் உறையும் தன்மை அதிகரிக்கும். இது இறப்பிற்கு வழிவகுக்கும். எனவே ஜிம்மில் உடற்பயிற்சி செய்வோர் திடீரென இறந்துவிடுவதற்கு இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுதான் காரணமாக இருக்கும்.இவ்வாறு கூறினார்.
Leave your comments here...