கோயில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டது – உண்டியலில் காசு போடாதீர்கள்..! அறநிலையத்துறையை நீக்குங்கள் – மதுரை ஆதீனம்..!
கோயில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டதாகவும், இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.
விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசுகையில், கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டதாகவும், இதனால், கோயில் சொத்துக்கள் கொள்ளை போவதாகவும் குறிப்பிட்டார். கோயில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை எனக் கேள்வி எழுப்பினார்.
ஆன்மீகத்தை திராவிட அரசியல் திருடிவிட்டதாகக் குறிப்பிட்ட மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு மாற்றாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கோயில்கள் இயங்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் வலியுறுத்தினார்.
அதீனங்கள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள், ஆனால், அரசியலை நாங்கள் பேசாமல் வேறு யார் பேசுவது? என அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் திருக்கோயிலுக்குள் உள்ளது என தெரிவித்த மதுரை ஆதீனம், திராவிட பாரம்பரியம் என்று சொல்பவர்கள் திருநீறு பூச மறுப்பதாகவும் ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்வதாகவும் விமர்சித்தார்.500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது. கடந்த காலங்களில் கோவில்களில் களவு போன சாமி சிலைகளை பிரதமர் மோடி மீட்டு வருகிறார் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...