ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம் – எச்சரித்த இந்திய ரயில்வே
ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களோடு நிறைய லக்கேஜ்களை கொண்டு செல்கின்றனர். துணி, உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பேக் மூலமாகவும், மூட்டைகளாகவும் எடுத்துச் செல்கின்றனர். சிலர் ஒரு ரயில் பெட்டியையே அடைக்கும் அளவுக்குக் கூட எடுத்துச் செல்வார்கள். இது மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும்.
ரயில் பயணிகளில் தங்களுடன் எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதிமுறையும் கட்டுப்பாடும் உள்ளது. இந்த விதிமுறை நீண்ட காலமாகவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அதைப் பின்பற்றுவதும் இல்லை. இந்த விஷயத்தில் இந்திய ரயில்வே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடிவுசெய்துள்ளது.
ரயிலில் உள்ள பெட்டிகளுக்கு ஏற்ப லக்கேஜின் எடையை இந்திய ரயில்வே துறை நிர்ணயம் செய்துள்ளது. அதிகபட்சமாக 40 முதல் 70 கிலோ வரை லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். இருப்பினும், டிக்கெட் வகுப்பைப் பொறுத்து பயணிகளுக்கு லக்கேஜ்களை எடுத்துச் செல்ல பல்வேறு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாவது வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது 35 கிலோ வரையிலான சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால் கூடுதல் கட்டணம் செலுத்தி அதிகபட்சமாக 70 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம்.முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்ய நீங்கள் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். ஆனால் கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் 150 கிலோ வரை லக்கேஜ் கொண்டுசெல்லலாம்.
ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சில் பயணம் செய்யும் போது 40 கிலோ வரையிலான லக்கேஜ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனினும் ரயில்வே துறை நிர்ணயிக்கும் கட்டணத்தைச் செலுத்தி அதிகபட்சமாக 80 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.ரயில்வே துறை நிர்ணயித்த வரம்பை விட பயணிகள் அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றால் குறைந்தபட்சம் 30 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதிக அளவில் சாமான்கள் இருந்தால் 2 மடங்கு வரை அபராதம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
விமான நிலையங்களில் லக்கேஜ்களை கண்காணிக்கவும் எடையைச் சரிபார்க்கவும் உள்ள வசதிகளைப் போல ரயில் நிலையங்களிலும் உள்ளன. ஆனால் அவை முறைப்படி சரியாக கண்காணிக்கப்படுவதில்லை. இனி இந்த விஷயத்தில் தீவிரமாகச் செயல்பட இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. லக்கேஜ் விஷயத்தில் ரயில் பயணிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றும்படி ரயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave your comments here...