காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் : ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை..!
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில், தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்- இ- தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமதுவை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் வெளிநாடுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியால், பொதுமக்கள், போலீசார், அரசு ஊழியர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று, பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கு இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சூடு நீடித்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி நிசர் கான்டெ என்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 3 பேர், பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது
Leave your comments here...