மாநிலங்களுக்கு மே 31 வரை அனைத்து ஜிஎஸ்டி நிலுவை தொகையையும் விடுவிப்பு : தமிழகத்துக்கு ரூ. 9602 கோடி – மத்திய அரசு அறிவிப்பு!
மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு முழுவதையும் (31st மே, 2022 வரை) மத்திய அரசு விடுவித்துள்ளது.
2022 மே 31-ந் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு (ரூ.86,912 கோடி) முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மாநிலங்கள் இந்த நிதியாண்டின் மூலதனச்செலவு உள்ளிட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய உதவும். ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் சுமார் ரூ.25,000 கோடி மட்டுமே இருப்பில் இருந்தபோதிலும், இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி மத்திய அரசின் கூடுதல்வரி வசூல் மூலம் சரிகட்டப்படும்.
2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஐந்தாண்டு காலத்திற்கு, மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சில பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதன்படி, 2017 ஜூலை மாதம் முதல் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவந்தது.
மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் கூடுதல் வரி விதிப்பு உள்ளிட்ட மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய பாக்கி ரூ. 17,973 கோடியாகும். பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான பாக்கி ரூ. 21,322 கோடி. 2022 ஜனவரி வரையிலான இழப்பீட்டு பாக்கி ரூ. 47,617 கோடி. மொத்தம் 86,912 கோடி. இந்த தொகை விடுவிக்கப்பட்டதையடுத்து, தற்போது வரை மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு பாக்கி ஏதுமில்லை.
மாநிலங்களை பொறுத்தவரை மத்திய அரசு விடுவித்துள்ள தொகையில் தமிழகத்துக்கு ரூ. 9602 கோடி கிடைக்கும். புதுச்சேரிக்கு ரூ.576 கோடி வழங்கப்படும்.
Leave your comments here...