20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணி : பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை..!

அரசியல்

20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணி : பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை..!

20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால் திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணி : பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை..!

பெட்ரோல், டீசல் விலையை 30 நாட்களுக்குள் குறைக்கவில்லை என்றால் திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்துவோம் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு குறைக்காது நிலையில் இன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வி.பி. துரைசாமி கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசு இரண்டு முறை கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து உள்ளது. ஆனால் இங்கே உள்ள சினிமா அரசு வாய் சவடால் அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது. ஒவ்வொரு ஊராக சென்று அமைச்சர்கள் பட்டத்து இளவரசரை அமைச்சராக கூட்டம் போட்டு கொண்டு இருக்கின்றனர். தேர்தல் அறிக்கையை எழுதிய டி.ஆர்.பாலுவை முதல்வராக்குங்கள், நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்.

பா.ஜ.க போராட்டத்துக்கு பயந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று உள்ளார். இந்த விடியா அரசின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கிறது. இன்னும் 750 நாட்கள் தான் இருக்கிறது. தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் அடுத்த கட்ட ஊழல் பட்டியலை வெளியிட உள்ளோம்.

பிரதமரை அமர வைத்து கொண்டு என்ன பேசினாலும், அதை கேட்பதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. கச்சத்தீவை கனவில் கூட திமுகவால் மீட்க முடியாது. அதை பா.ஜ.க விடம் விட்டு விடுங்கள், நாங்கள் பார்த்து கொள்கிறோம்.பிரதமர் முன் முதல்வர் கூறிய அனைத்து புள்ளி விவரங்களும் தவறானது. நிதி அமைச்சர் எங்கு பரீட்சை எழுதினாலும், பெயில் ஆகிறவர். அவரின் தாத்தாவின் பெயரை கெடுத்து வருகிறார். முதல்வர் பேசிய ஆங்கிலத்தை பார்த்து, பயந்து தான் மோடி புறப்பட்டு விட்டார்.

மக்களை வேறு மொழி படிக்க அனுமதியுங்கள் அதுதான் நமது புதிய கல்வி கொள்கை. இதை நமது முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால் 20 நாட்கள் கழித்து மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் இருப்போம்.30 நாட்களுக்கு பிறகும் அரசு செவி சாய்கவில்லை என்றால் 10 லட்சம் பா.ஜ.க வினர், திருச்சியில் கண்டன பேரணியில் ஈடுபடுவோம். திருச்சி பேரணி திமுகவிற்கு அஸ்தமனமாக அமையும். அடுத்த 2 வருடங்களுக்கு பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்துக்கும், கைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். திமுகவை நாம் சும்மா இருக்க விட போவதில்லை. எத்தனை வழக்குகளை போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அரசு இயந்திரத்தை வைத்து கொண்டு திமுக போடும் கோமாளி வேசங்களை பா.ஜ க பொறுத்து கொண்டு இருக்காது என்று அவர் கூறினார்.

பின்னர் மேடையில் இருந்து இறங்கி போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலியை நோக்கி முற்றுகைப் போராட்டத்திற்கு அனைவரும் புறப்பட்டனர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டனர். பின்னர் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை புறப்பட முற்பட்ட போது, அவருடைய வாகனம் வருவதற்கு தாமதமானது. இதனால், அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் அவர் ஏறி புறப்பட்டு வேகமாக சென்றார்.

Leave your comments here...