பெண்களுக்கு கட்டாய நைட் ஷிப்ட் கூடாது : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு – பெண்கள் வரவேற்பு..!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு நிறுவனங்களில் கட்டாய நைட் ஷிப்ட் வேலை வைக்கக்கூடாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அந்த வகையில், அண்மையில் உத்தரப் பிரதேச தொழிலாளர் துறை வெளியிட்டிருக்கும் உத்தரவில், பெண் தொழிலாளர்களை மாலை 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கட்டாயமாக வேலை செய்ய வைப்பதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. அதாவது நைட் ஷிப்டில் வேலை பார்க்குமாறு பெண்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. பெண்கள் தங்களது விருப்பத்தின் பேரில் வேலை செய்யலாமே தவிர, அவர்களை பணிசெய்யுமாறு நிறுவனங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், அரசின் இந்த உத்தரவை காரணம் காட்டி இரவு பணி செய்யும் பெண் தொழிலாளர்களை நிறுவனங்கள் வேலையிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறது. அத்துடன் சுய விருப்பத்தின் பேரில் இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதிய பாதுகாப்பு ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் உ.பி அரசு தனது உத்தரவில் கூறியிருக்கிறது.
மாநிலத்தில் உள்ள அனைத்து மில் மற்றும் தொழிற்சாலைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கித் தரும் நோக்கிலேயே இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிறிவனங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
Leave your comments here...