நாட்டின் முப்படைகளும் இணைந்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம் – புதிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே
நாட்டின் முப்படைகளும் இணைந்து தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே உறுதி அளித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்து திறபம்பட பணியாற்றி வந்தவர் எம்.எம்.நரவனே. இவரது பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து நாட்டின் 29-வது ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டார்.
1965-ம் ஆண்டு பிறந்த நாக்பூரைச் சேர்ந்த மனோஜ் பாண்டே, 1982-ம் ஆண்டு முதல் ராணுவத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றினார். பின்னர் லடாக் எல்லை, அந்தோமான் நிக்கோபர் பிராந்திய தளபதியாகவும் மனோஜ் பாண்டே பணிபுரிந்தவர். சில மாதங்களுக்கு ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் ராணுவ தளபதி முகுந்த் நரவனே ஓய்வு பெற்றதால் தற்போது மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ்பாண்டேவிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் முகுந்த் நரவனே ஒப்படைத்தார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் பாண்டே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்த நிலையில் டெல்லியில் சவுத் பிளாக் புல்வெளியில் நேற்று அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- “உலகளாவிய அரசியல் நிலைமை அதிரடியாக மாறி வருகிறது. இதன் விளைவாக நமக்கு பல சவால்கள் இருக்கின்றன. தற்போதைய சமகால மற்றும் எதிர்கால சவால்களை முழு அளவில் எதிர்கொள்கிற வகையில், ராணுவத்தின் மிக உயர்ந்த செயல்பாட்டு தயார் நிலையை உறுதி செய்வதற்கு அதிகபட்ச முன்னுரிமை அளிப்பேன்.
இந்திய விமானப்படை மற்றும் கடற்படையுடன் இந்திய ராணுவம் ஒருங்கிணைந்து, நாடு எதிர்கொள்ளும் அனைத்து பாதுகாப்பு சவால்களையும் திறம்பட கையாளும். உள்நாட்டு மயமாக்கல் மற்றும் சுய சார்பின் மூலம் திறன் மேம்பாடு, நவீனமயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு முயற்சிகள் எடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...