ஆர்.எஸ்.எஸ் இயக்க நிர்வாகி கொலை – பாலக்காட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.!

இந்தியா

ஆர்.எஸ்.எஸ் இயக்க நிர்வாகி கொலை – பாலக்காட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.!

ஆர்.எஸ்.எஸ்  இயக்க நிர்வாகி  கொலை – பாலக்காட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.!

பாலக்காட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் கொலைகளால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.நேற்று காலை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சீனிவாசன் (45 வயது) என்பவர் பாலக்காட்டில் உள்ள அவரது கடையில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்த அவரை, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

பாலக்காடு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) தலைவர், சுபைர் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுபைர் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

43 வயதான சுபைர், கடந்த வெள்ளிக்கிழமையன்று மதியம் மசூதியில் தொழுகை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக, சீனிவாசன் கொலைக்குப் பின்னணியில் பி.எப்.ஐ இன் அரசியல் அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) இருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், பாலக்காடு மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 150 ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு காவல்துறையிலிருந்து 240 போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் 500 பேர் என் சுமார் 900 போலீசார் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாலக்காடு பகுதியிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் வாகனங்களும் கடும் சோதனை செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave your comments here...