மண் என்பது வற்றாத வளம் அல்ல; அது நம் வாழ்வின் ஆதாரம் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பில் சத்குரு பேச்சு..!
‘நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் மண் வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வுடன் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் நிகழ்ச்சியில் சத்குரு பேசினார்.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் நிர்வாக செயலாளர் இப்ராகிம் தியாவ் அவர்களுடன் சத்குரு நேற்று (ஏப்ரல் 13) கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், “உலகில் உள்ள பல அரசாங்கங்கள் மண்ணை ஒரு செயலற்ற ஒரு பயன்பாட்டு பொருளாகவே கையாள்கின்றன. சில செயற்கை உரங்களை கூடுதலாகவோ, குறைவாகவோ பயன்படுத்தி மண் வளத்தை நிர்வகித்து விட முடியும் என கருதுகின்றனர். இந்த அணுகுமுறையை நாம் முதலில் மாற்றி கொள்ள வேண்டும். மண் என்பது வற்றாத ஒரு பயன்பாட்டு பொருள் அல்ல; அது நம் வாழ்வின் ஆதாரம்.
இந்த விழிப்புணர்வுடன் மண் வளப் பாதுகாப்பை நாம் மேம்படுத்த வேண்டும். நிகழ்காலத்தில் நாம் எதிர் கொண்டு வரும் பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கப் பாதிப்பு மற்றும் சூழலியல் அழிவு போன்ற பல்வேறு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மண் அழிவு தான் மிக அடிப்படையான காரணம். அதை சரி செய்தால் மற்ற பிரச்சினைகளையும் எளிதில் சரி செய்துவிட முடியும்.” என்றார்.
மண் அழிவை தடுப்பதற்கும், இழந்த வளத்தை மீட்டெடுப்பதற்கும் மனிதர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை சத்குருவும் திரு. இப்ராகிம் தியாவும் இணைந்து வலியுறுத்தினர். மண் வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி சத்குரு மேற்கொண்டுள்ள 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். UNCCD அலுவலகத்தில் அதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரும் மே மாதம் UNCCD சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடத்தப்பட உள்ள COP15 சுற்றுச்சூழல் மாநாட்டிலும் சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இதில் உலகில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...