இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் டோர்னியர் விமானம் – கொடியசைத்து இயக்கி வைத்தார் மத்திய அமைச்சர்..!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது டோர்னியர் விமானத்தை மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு ஆகியோர் இன்று கொடியசைத்து அதன் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த விமானம் அசாமில் உள்ள திப்ருகரிலிருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் பாசிகாட் வரை இயக்கப்படும். அங்கிருந்து அசாமின் லிலாபரிக்கு அந்த விமானம் செல்லும்.
பொதுத்துறை விமான நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் எச்ஏஎல்- உடன், டோர்னியர் விமானத்தை இயக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கிற்கு இணங்க இந்த முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை முதல் முதலாக வணிக பயன்பாட்டுக்கு அலையன்ஸ் ஏர் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சிந்தியா, கடந்த 70 ஆண்டுகளாக 74 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டன என்றும் கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 66 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், நாட்டில் தற்போது 140 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் எச்ஏஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர். மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave your comments here...