உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேருங்கள் – கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ கடிதம்.!
தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வகிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. போர் காரணமாக தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சுமார் 20,000 பேர் கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பிவிட்டதை அக்கடிதத்தில் AICTE சுட்டிக் காட்டியுள்ளது.
அவ்வாறு கல்வியை கைவிட்டு பாதியிலேயே உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு உதவிடும் வகையில், பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா திரும்பிய மாணவர்கள் உக்ரைனில் எந்த தொழில்நுட்ப பாடப்பிரிவு மற்றும் ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதே மட்டத்தில் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் AICTE அறிவுறுத்தியுள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை ஒதுக்கவதன் மூலம் உக்ரைன் போரால் கல்வி பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் இந்திய மாணவர்கள் நிம்மதி அடைவார்கள் என்பதால் இதற்கு ஆவணம் செய்யுமாறு AICTE கேட்டுக் கொண்டுள்ளது.
Leave your comments here...