ராணுவத்தில் சேர தினமும் நள்ளிரவில் 10 கி.மீ. ஓட்டம் – சமூக வலைதளத்தில் பிரபலமடைந்த இளைஞர்..!
ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்திற்காக, பணி செய்யும் இடத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீடு வரை, தினமும் நள்ளிரவு ஓட்டப்பயிற்சிமேற்கொள்ளும் 19 வயது இளைஞரின் ‘வீடியோ’வை, சமூக வலைதளத்தில் பல லட்சம் பேர் பார்வையிட்டு, வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் வசித்து வரும் 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா, ‘மெக் டொனால்ட்ஸ்’ உணவகத்தில் பணியாற்றி வருகிறார். தினமும், இரவில் பணி முடித்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டுக்கு, நள்ளிரவில் ஓடி திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.தேசிய விருது பெற்ற, ‘பாலிவுட்’ திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான வினோத் கப்ரி
நள்ளிரவில் காரில் செல்கையில், இந்த இளைஞர் வேகமாக ஓடி செல்வதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
இளைஞரின் வேகத்துக்கு இணையாக காரை ஓட்டியபடியே, அவருடன் பேச்சு கொடுத்தார். ‘நள்ளிரவில் இத்தனை வேகமாக ஓடி எங்கே செல்கிறீர்கள்; காரில் ஏறுங்கள் நான் இறக்கி விடுகிறேன்’ என வினோத் கூறினார். இதை மறுத்த பிரதீப், ‘ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என் லட்சியம். அதற்கு பயிற்சி எடுப்பதற்காகவே, தினமும் இப்படி ஓடுகிறேன். நள்ளிரவில் மட்டுமே, அதற்கு நேரம் கிடைக்கிறது’ என பதில் அளித்தார்.
#PradeepMehra आज रात 12 बजे – फिर से ❤️ https://t.co/8cDE8gR94m pic.twitter.com/5xo8mmf5uJ
— Vinod Kapri (@vinodkapri) March 20, 2022
பிரதீப் உடனான இந்த உரையாடலை, தன் ‘மொபைல் போனில்’ படம் பிடித்த வினோத் கப்ரி, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதை, 12 மணி நேரத்தில், 38 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். 1.53 லட்சம் பேர், ‘லைக்’ குறியிட்டுள்ளனர்.இந்த வீடியோ, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘டிரெண்டிங்’ ஆகிஉள்ளது.
Leave your comments here...