தெருக்களில் வழிகாட்டி பலகைகள் மீது போஸ்டர் ஒட்டினால் குற்றவியல் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை, தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் மீது போஸ்டர் ஒட்டினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1 முதல் நேற்று வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ₹2,483 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்கவும் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அங்கு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் விளக்கும் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் சாலை மற்றும் தெருக்களில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இந்த சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்று வழிகாட்டு பலகைகளின் மீது சுவரொட்டி மற்றும் விளம்பரங்கள் செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் மீது காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிப்படுகின்றன.
சில இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை நுணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை வீசுபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பை கொட்டுபவர்களுக்கு ₹500 மற்றும் கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்களுக்கு ஒரு டன் வரை ₹2 ஆயிரமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...