ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது துவக்கம்..!

இந்தியாஉலகம்

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது துவக்கம்..!

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது துவக்கம்..!

இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், ஐ.ஓ.சி., எனப்படும் ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

அதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.இதனால், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷ்யா, புதிய அறிவிப்பை வெளியிட்டது. சர்வதேச விலையைவிட குறைந்த விலையில், அதிக தள்ளுபடியுடன், கச்சா எண்ணெய் விற்க தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்தது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சலுகையை தருவதாக ரஷ்யா கூறியிருந்தது.நம் நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்கள் தேவையில், 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. தேவையை ஈடு செய்யும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வந்தது.

இதை, மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பார்லிமென்டிலும் தெரிவித்திருந்தார். இந்தியா இதுவரை தன் தேவையில், 1.3 சதவீதம் அளவுக்கே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வந்துள்ளது.இந்நிலையில், ஐ.ஓ.சி., நிறுவனம், முதல்கட்டமாக ரஷ்யாவிடமிருந்து 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து, மத்திய பெட்ரோலிய அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:ஒரு வியாபாரி மூலம், ரஷ்யாவிடமிருந்து, 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க, ஐ.ஓ.சி., ஒப்பந்தம் செய்துள்ளது. சர்வதேச விலையில் இருந்து ஒரு பேரலுக்கு 20 முதல் 25 டாலர்கள் குறைவாக கச்சா எண்ணெய் நமக்கு கிடைக்க உள்ளது.காப்பீடு, போக்குவரத்து செலவுகளை ஏற்பதாக ரஷ்யா கூறியுள்ளது. மேலும், இந்த கச்சா எண்ணெய், நம் நாட்டில், ‘சப்ளை’ செய்யப்பட உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை, இந்த விஷயத்துக்கு பொருந்தாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

”இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை மீறுவதாக அமையாது,” என, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் பசாக்கி கூறியுள்ளார்.

Leave your comments here...