சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் 6 கரீபியன் நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!
உலக அளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்துடன் மொத்தம் 6 கரீபியன் நாடுகள் தங்கள் நாடுகளில் மண் வளத்தை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன
அதன்படி, ஆன்டிகுவா பார்படா, செயின்ட் லூசியா, டொமினிகா, செயின்ட் கிட்ஸ் நெவிஸ் ஆகிய 4 நாடுகளைத் தொடர்ந்து கயானா மற்றும் பார்படாஸ் ஆகிய 2 நாடுகளின் தலைவர்களும் ஒப்பந்தங்களில் கைழுத்திட்டுள்ளனர்.
அந்நாட்டு பிரதமர்களை கடந்த சில நாட்களில் நேரில் சந்தித்த சத்குரு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கூறுகையில், “கடலில் இருக்கும் முத்துக்களை போல் இருக்கும் இந்த சிறிய நாடுகள், மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளன. ஒவ்வொரு நாடும் பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களின் எதிர்கால நல்வாழ்விற்காக, மண் வளத்தை காக்க வேண்டும்; காக்க முடியும் என்பதை இந்நாடுகள் எடுத்துக்காட்டி இருக்கின்றன. மண் வளத்தை பெருக்கி, சுற்றுச்சூழலை காக்கும் இந்த முயற்சியானது நம் தலைமுறையில் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயலாகும்” என கூறியுள்ளார்.
ஆன்டிகுவா பார்படா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுன் கூறும் போது, ”மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மண் வளம் இழந்து அழிவை நோக்கி செல்கிறது. இது நாம் வாழும் பூமிக்கு எதிரான மாபெரும் அச்சுறுத்தல் ஆகும். 30 வருடங்களுக்கு முன்பு பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக கண்டறியப்பட்டது. அப்போது எங்களுடைய கரீபிய நாடுகள் தான் அந்தப் சுற்றுச்சூழல் பிரச்சினையை எதிர்த்து போரிடுவதில் முன்னணியில் இருந்தோம். அதேபோல் இப்போது, மண் வள அழிவை தடுக்கும் முயற்சியிலும் நாங்கள் தொடக்கத்திலேயே இணைந்து உள்ளோம்” என்றார்.
பார்படாஸ் நாட்டின் பிரதமர் மியா மோட்லி, “மண் வளத்தை பாதுகாக்கும் விஷயத்தில் நாம் இப்போது முடிவெடுக்காவிட்டால். 2050 ஆண்டு நாம் பாதுகாப்பான நிலையில் இருக்க முடியாது. ஆகவே, மண் காப்போம் என்ற முன்னெடுப்பு சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (UNFAO) நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், உலகில் மேற்பரப்பு மண்ணின் வளம் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் முற்றிலும் காணாமல் போய்விடும் என எச்சரித்துள்ளது. மேலும், சர்வதேச விஞ்ஞானிகள் 2045-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 930 கோடியாக பெருகும் எனவும், அதேசமயம், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறையும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
எனவே, உலகளவில் மண் வளத்தை காக்க அரசாங்கள் சட்டங்கள் இயற்றவும், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சத்குரு லண்டன் முதல் இந்தியா வரை 27 நாடுகளுக்கு தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்படும் அவர் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்து தமிழ்நாடு வர உள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மே மாதத்தில் ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடக்கும் COP 15 சுற்றுச்சூழல் மாநாட்டிலும், டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் சத்குரு பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.
ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD), ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (WFP) மற்றும் CARICOM எனப்படும் கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புகள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து இணைந்து செயலாற்ற உள்ளன.
Leave your comments here...