மண்ணை காக்கும் சட்டங்கள் இயற்ற மக்கள் குரல் கொடுக்க வேண்டும் – மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு கோரிக்கை…!
‘மண் வளத்தை பாதுகாக்கும் சட்டங்களை அரசாங்கங்கள் இயற்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்’ என்று ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு தெரிவித்தார்.
ஆதியோகி முன்பு நடந்த இவ்விழாவில் சத்குரு பேசியதாவது: மண் இல்லாமல் நாடு இல்லை. மண் இல்லாமல் உயிர் இல்லை. இறந்தாலும் மண் தான். உயிருடன் இருந்தாலும் மண் தான். மண்ணில் சத்து இல்லாமல் போனால் நாமும் சத்து இழந்து போவோம்.
உலகளவில் மண் வளம் என்பது மிக வேகமாக அழிந்து வருகிறது. இதனால், அடுத்த 25 ஆண்டுகளுக்குள் உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விடும் என பல விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதேசமயம், நம் மக்கள் தொகை 900 கோடியாக உயரும் எனவும் கூறுகிறார்கள். மக்கள் தொகை அதிகரித்து, உணவு உற்பத்தி குறைந்தால், நாட்டில் உணவு தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். உணவு பஞ்சம் வந்தால் நாகரீகமும், கலாச்சாரமும் மூன்றே நாளில் தொலைந்து போகும். மனித தன்மை காணாமல் போகும்.
இந்த அவலநிலை உருவாகாமல் தடுக்க நம் மண்ணை காப்பதற்கு உலகளவில் மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்க உள்ளோம். இது தொடர்பாக கடந்த 8 மாதங்களில் பல்வேறு நாட்டு தலைவர்களையும், விஞ்ஞானிகளையும் சந்தித்து பேசியுள்ளோம். ஐ.நாவின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம். மார்ச் 21-ம் தேதி லண்டனில் ஆரம்பித்து பல்வேறு நாடுகள் வழியாக காவேரி பகுதிக்கு தனி ஆளாக 30 ஆயிரம் கி.மீ மோட்டர் சைக்கிளில் பயணிக்க உள்ளேன். கிட்டத்தட்ட 100 நாட்கள் நடக்கும் இப்பயணத்தின் போது உலகில் உள்ள 192 நாடுகள் மண்ணை காக்க உரிய சட்டங்களை இயற்ற வலியுறுத்த உள்ளோம்.
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் ஜனங்கள் தான் நாயகர்கள். நாயகர்கள் வீட்டில் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தால் ஒன்றும் நடக்காது. மண் வளம் அழிந்து வருவது நம் தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கும் பெரிய பாதிப்பாக அமையும். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தப்பட்சம் தினமும் 10 நிமிடங்களாவது மண் வள பாதுகாப்பு குறித்து உங்களுக்கு தெரிந்ததை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடம் மண் வளம் குறித்து பேச வேண்டும்.
மண் வளத்தை பாதுகாக்கும் சட்டங்களை அரசாங்கள் இயற்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சத்தமாக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்தியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகளை கடந்து மண்ணை காக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இந்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு கவனம் கொடுக்க வேண்டும். இதற்கு மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். இவ்வாறு சத்குரு கூறினார்.
Leave your comments here...