காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்..!
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அஸ்வினி குமார் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் மூலம் தகவல் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்தத் தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பாஜகவுக்கு எதிராக கட்சியை வலுவாக கட்டமைக்க முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியில் இருந்து மூத்தத் தலைவர்கள் ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியையும் கவிழ்த்தார். இது போல் கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான அஸ்வனி குமார், அக்கட்சியில் இருந்து விலகுவதாக, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கடந்த 46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும், தனக்கு அனைத்து விவகாரங்களிலும் முழு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டு உள்ளார். தனது அடுத்த கட்ட முடிவு குறித்து அஸ்வனி குமார் அறிவிக்கவில்லை.
Leave your comments here...