குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிக்கு, குடும்பத்தின் மீது தான் அக்கறையிருக்கும் – பிரதமர் மோடி..!

அரசியல்

குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிக்கு, குடும்பத்தின் மீது தான் அக்கறையிருக்கும் – பிரதமர் மோடி..!

குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிக்கு, குடும்பத்தின் மீது தான் அக்கறையிருக்கும் – பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- ஜனநாயகத்தின் விரோதி வாரிசு மற்றும் குடும்ப அரசியல். கட்சியை ஒரு குடும்பம் நடத்தி வந்தாலோ, ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தினாலோ, திறமையாளர்கள் காணாமல் போய்விடுவர். நாட்டில், குடும்ப அரசியலுக்கு வித்திட்டது காங்கிரஸ். இன்று பல கட்சிகளில், குடும்ப அரசியல் தான் நடக்கிறது.

தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல கட்சிகளில், வாரிசு அரசியல் தான் நடக்கிறது.சமாஜ்வாதி கட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 45 பேர், கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பதாக, எனக்கு ஒருவர் முன்பு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கட்சியின் தலைவர்கள், தங்களை ‘சோஷலிஸ்ட்கள்’ என, கூறிக் கொள்கின்றனர்.

சோஷலிஸ்ட் தலைவர்களாக இருந்த ராம் மனோகர் லோஹியா, ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர், தங்கள் குடும்பத்தினர் யாரையும் அரசியலில் ஈடுபடுத்தவில்லை. பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் சோஷலிஸ்ட்தான். அவருடைய குடும்பத்தை யாருக்காவது தெரியுமா..? இப்போது அரசியலில் இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளதற்கு, வாரிசு அரசியல் தான் காரணம். ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிக்கு, குடும்பத்தின் மீது தான் அக்கறையிருக்கும்; நாட்டின் மீது நிச்சயம் அக்கறை இருக்காது.
பா.ஜ.,விலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். ஆனால், எண்ணிக்கை குறைவு. மேலும், ஒரே குடும்பத்தின் பிடியில் கட்சியில்லை; ஒரே குடும்பத்தை சேர்ந்த யாரும், கட்சி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.

ஒரு குடும்பத்தை புகழ்ந்தால் மட்டுமே, கட்சியில் நீடிக்க முடியும் என்ற நிலை, பா.ஜ.,வில் இல்லை, அதனால் தான், இளைஞர்களை ஈர்க்கும் கட்சியாக, பா.ஜ., மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி திட்டங்களில், நாங்கள் அரசியல் செய்வது இல்லை. மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், நாங்கள் சோஷலிஸ்டுகளாகத் தான் உள்ளோம். ஏழைகளில் நலனில், எங்கள் அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

அதனால் தான் ஏழைகளுக்கு இலவசமாக வீடு, கழிப்பறை, காஸ் இணைப்பு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்கியுள்ளோம். சிறு விவசாயிகளும், சந்தைக்கு வந்து தங்கள் பொருட்களை விற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஏழைகளுக்கு வங்கி கணக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.

பார்லிமென்டில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றே அரசு விரும்புகிறது. அதற்கு தயாராகவும் உள்ளது. பார்லிமென்டில் எதிர்கட்சிகள் எழுப்பிய அனைத்து பிரச்னைகளுக்கும் நானும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் பதில் அளித்துதான் வருகிறோம்.’கேள்வி மட்டும்தான் கேட்பேன்; பதிலை கேட்க மாட்டேன்’ என இருப்பவரிடம், பதில் அளித்து பலனில்லை.நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதில்லை, ஆரோக்யமான விமர்சனம், எதிர்ப்பு இருந்தால் மட்டுமே, ஜனநாயகம் வலுவாக இருக்கும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், அரசை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தவறு.இவ்வாறு பிரதமர் கூறினார்.

Leave your comments here...