மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 12ம் தேதி திறப்பு..!
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகள் வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி 12ம் தேதி மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவின் முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
மறுநாள் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாசி மாத பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் நெய்யபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மாசி மாத பூஜைகளில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இது குறித்து ஒரு சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Leave your comments here...