தேசிய மகளிர் ஆணையம் 30 ஆண்டு நிறைவு – பிரதமர் மோடி இன்று சிறப்புரை
தேசிய மகளிர் ஆணையம் 1992-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண்களின் நலனை பாதுகாப்பதற்காக 1990-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய மகளிர் ஆணைய சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அமைப்பாக இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது. அரசியல் சாசனப் படியும், சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்றவற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தொடங்கி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் மையக் கருத்தாக ‘அவள் மாற்றத்தை உருவாக்குபவள்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு துறைகளில் பெண்கள் அடைந்த சாதனைகளை முன்வைத்து தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி ராணி, மாநில மகளிர் ஆணையம், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உறுப்பினர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரிய பெருமக்கள், மாணவிகள், தன்னார்வ நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Leave your comments here...