முகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் தோறும் தனியாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையங்கள் – தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி
தமிழ்நாடு காவல்துறை, சைபர் குற்றங்களை தடுக்க தனியாக ஒரு பிரிவை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. தற்போது சைபர் அரங்கம் ஒன்றும் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையிலுள்ள காவல்துறை இயக்குநரக அலுவலகத்தில் பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு 7 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு, தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் பேசிய அவர்:-
சைபர் குற்றங்களை தடுப்பது குறித்த போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 1,348 பேர் பதிவு செய்தனர். அதில், 13 பெண்கள் உள்பட 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சைபர் குற்றங்களை தடுக்க மாநில அரசும் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் தோறும் தனியாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன .இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பங்களிப்பையும் பெற உள்ளோம். இதன் மூலம் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிப்பதற்காக பல்வேறு இடங்களில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன என கூறினார் . முன்னதாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.
Leave your comments here...