அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் : சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 17 வயதான மகள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில், அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் தரப்பில் சிலர் மாணவியை மதம் மாறக்கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கட்டாய மத மாற்றத்திற்கு எதிராகவும் பாஜகவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் சென்னை வள்ளுவர் கோட்ட உண்ணாவிரதத்தில் ..#JusticeForLavanya #NationWithLavanya pic.twitter.com/UUG3cZnV1b
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 25, 2022
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக கட்டாயம் சி.பி.ஐ விசாரணை தேவை. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, மாணவி பேசிய வீடியோவை விசாரணை அதிகாரியிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார்.
மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோ போலியானது என்பதற்கு ஆதாரம் இல்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. மாணவி இறந்த விவகாரத்தில் யாரும் மதச்சாயம் பூசவில்லை.இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனே ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...