வடபழநி முருகன் கோவிலில் ரூ.50 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்..!
வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் வசதிக்காக, 50 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் துவக்கப்படும்,” என கோவில் மூலஸ்தான பாலாய நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை வடபழநி ஆண்டவர் கோவில், கடந்த மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கின. இதையடுத்து, கும்பாபிஷேக யாகசாலை கட்டுமானத்திற்கான முகூர்த்தக்கால் எனப்படும் பந்தக்கால், டிச., 13ம் தேதி நடப்பட்டது. இந்நிலையில், கோவிலில் மூலஸ்தான பாலாலயம் நேற்று நடந்தது.
இதில், பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு அங்கு நடக்கும் திருப்பணிகளை பார்வையிட்டார். பின், பாலாலய நிகழ்வில் பங்கேற்று, சங்கல்பம் செய்துக் கொண்டார்.
பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:சென்னையின் பிரசித்தி பெற்ற வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக, 108 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் திருப்பணிக்கான, 90 சதவீத நிதி, நன்கொடையாளர்கள் வாயிலாக பெறப்பட்டு, திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.தமிழக முதல்வருடன் கலந்தாலோசனை செய்து, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுதும் கடைபிடித்து, குறித்த தேதியில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
சட்டசபை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டபடி, வடபழனி முருகன் கோவில் சார்பாக பக்தர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய, 44 சிறிய திருமண மண்டபங்கள் 19.50 கோடி ரூபாயில் கட்டப்படும்.இக்கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டுமானம், 19 கோடி ரூபாயிலும், அன்னதாகக் கூடம், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்குமிடம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவை ஒன்பது கோடி ரூபாயிலும் கட்டப்படும்.
ஐந்து கடைகள், இரு பணியாளர் குடியிருப்பு, சித்த மருத்துவமனை மற்றும் காலணி பாதுகாப்பு இடம் ஆகியவை, 84 லட்சம் ரூபாயில் கட்டப்படும்.ஆழ்வார்பேட்டை, குழந்தை முத்துக்குமார சுவாமி கோவில் திருப்பணிகள், 85 லட்சம் ரூபாய் மதிப்பிலும், புதிய சமய நுாலகம், நான்கு லட்சம் ரூபாய் என 50 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவக்கப்படும். கோவில்களில் பக்தர்கள் தரிசனம் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்.இவ்வாறு, அவர் கூறினார்.
.
Leave your comments here...