சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் : பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி..!

ஆன்மிகம்இந்தியா

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் : பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி..!

சபரிமலையில்  கூடுதல் தளர்வுகள்  : பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி..!

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மேலும் பல கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தளர்வுகளின் அடிப்படையில் எருமேலியிலிருந்து சபரிமலை சன்னிதானம் செல்லும் 38 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெருவழிப்பாதை என்ற இந்த பாரம்பரிய வனப்பாதை திங்கட்கிழமை அதிகாலை முதல் திறக்கப்பட உள்ளது.

சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்யவும் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்திலிருந்து  தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலம் துவங்கி நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாற்பத்தி ஐந்தாயிரம் ஆக அதிகரிக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் ஐயப்ப பக்தர்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த தடைகள் காரணமாக பக்தர்கள் வருகை அதிகரிப்பாலும், கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாலும் ஐயப்ப பக்தர்களுக்கு படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், கடந்த 11 ஆம் தேதி பம்பையில் இருந்து நீலி மலை, அப்பாச்சி மேடு, மரக் கூட்டம் வழியுள்ள வனப் பாதை ஐயப்பன் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டன. பக்தர்கள் சபரிமலை சபரிமலையில் தங்கிச் செல்லவும்,  பம்பையில் நீராடவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு இணைந்து சபரிமலை பக்தர்களுக்கு மேலும் பல தளர்வுகளை அறிவித்துள்ளன. இதையடுத்து பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ள வனப்பாதையான பெருவழிப்பாதையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பெருவழிப்பாதையில் பயணம் செய்யும் பக்தர்கள் பயணத்திற்கு தேவையான குடிநீர், உணவு,  மருத்துவம், மின்விளக்கு வசதிகள், ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave your comments here...