மண்டல பூஜை : சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை..!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது ஆன் லைன் முன் பதிவு மூலம் தினசரி 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன் பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் சன்னிதானத்தில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கவும், கூடாரங்கள் அமைத்து ஓய்வெடுக்கவும், பம்பையில் பக்தர்கள் நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு நடைஅடைக்கப்படும். இதையொட்டி முன் பதிவு செய்த பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் சபரிமலையில் 6.55 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அடுத்தமாதம் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. எனவே 14-ந்தேதி வரையிலான ஆன் லைன் முன் பதிவு ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளதால், கூடுதல் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது. அதைத்தொடர்ந்து மண்டல பூஜை நெருங்குவதால், பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தினசரி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ் கொண்டு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆன் லைன் முன்பதிவு இல்லாமல் நேரடியாக சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்வதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சபரிமலையில் கடந்த ஒரு மாத காலத்தில் சபரிமலை நடை வருமானமாக மொத்தம் ரூ.37 கோடி கிடைத்து உள்ளது. (கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் நடை வருமானம் 5.27 கோடியாக இருந்தது) இதில் காணிக்கையாக ரூ.16 கோடியும், அரவணை விற்பனை மூலம் ரூ.18 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.2.35 கோடியும் மற்றும் பூஜை வழிபாடுகள் மூலமும் என மொத்தம் ரூ.37 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
Leave your comments here...