அரசுக்கு எதிராக கருத்து : அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதாஸ்-க்கு டிசம்பர் 23 வரை சிறை..!
சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரிதாசை கைது செய்யக்கூடாது என போலீசாரை தடுத்தனர். ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் முழக்கமிட்டனர்.
யூடியூபர் மாரிதாஸ்
யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஒரு சில பதிவுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள், கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக ஏன் மீடியாக்களில் விவாதம் நடத்தப்படவில்லை, மு.க.ஸ்டாலின் எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பிய மாரிதாஸ், தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதேபோல் டுவிட்டரிலும் தனது கருத்தை காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இதேபோல் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவைத் தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், மாரிதாஸ் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.
அந்இந்நிலையில் இந்த விமான விபத்து சம்மந்தமாக அரசுக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டதாகவும் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்காக அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார், புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் மாரிதாஸ் வீட்டிற்கு சென்றனர். சம்மன் தரப்பட்டு, அவரை விசாரணக்கு அழைத்தும், அங்கிருந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் புதூர் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.மாரிதாஸை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்னர் அவருக்கு கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய, அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது புதூர் காவல்நிலையம் முன்பாக காவல்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பிறகு, மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மாரிதாஸை மதுரை மாவட்ட 4 வது குற்றவியல் நடுவர் நீதிபதி சுந்தர காமேஸ்வர முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். மாரிதாஸை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார், இதனையடுத்து மாரிதாஸை, மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்தனர்.
Leave your comments here...