சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு 10 லட்சம் பரிசுத் தொகை: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்க நிதிஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 -ன் கீழ் தமிழ்நாட்டில்உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த ஊக்கத்தொகையாக அரசு சார்பில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு மாவட்டத்திற்கு 3 ஊர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “முன் மாதிரியாக உள்ள சிற்றூர்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவி இயக்குநரை அணுகி சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் விவரங்களை பெற்று தொகுக்க வேண்டும்.தொகுக்கப்பட்ட கிராமங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் சரிபார்ப்பு செய்த பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப பெற வேண்டும்.
அதனடிப்படையில் சமத்துவ மயானம் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு மட்டுமே இப்பரிசுத் தொகை வழங்க பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் சென்னை தவிர்த்து மாவட்டத்திற்கு மூன்று கிராமங்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 11 கோடியே 10 இலட்சம் பரிசுத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு அரசு ஆணையிட்டுள்ளது.
Leave your comments here...