கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சர்வதேச பயணிகள் பிரிட்டனுக்கு வரலாம் என அனுமதி..!
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பல நாடுகள் அனுமதியளித்தன, உலக சுகாதார அமைப்பும் அனுமதியளித்து. ஆனால், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் இருந்தது.
இதனால் உலக நாடுகள் பலவும் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டவர்களை, தடுப்பூசி போடாதவர்களாகவே கருதி தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தன.நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த மாத தொடக்கத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது. இதை தொடர்ந்து, ‘கோவேக்சின்’ தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு பல நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.
அவ்வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்ட நபர்கள் பிரிட்டனுக்கு வரலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் உள்ள தடுப்பூசிகளை அரசாங்கம் அங்கீகரிக்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சினோவாக், சினோபார்ம் பீஜிங் மற்றும் கோவேக்சின் ஆகியவை, பிரிட்டனுக்கு வரும் பயணத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு பயனளிக்கும்.
முற்றிலும் தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள், புறப்படுவதற்கு முன் பிசிஆர் சோதனை அல்லது பயணிகள் இருப்பிடப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சுய-தனிமைப்படுத்தல் இல்லாமல் பிரிட்டனுக்கு பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியர்கள் இதன்மூலம் பயனடைவார்கள்.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் உட்பட, முழுமையாக தடுப்பூசி செலுத்திய மற்ற பயணிகளைப் போலவே, அவர்கள் பிரிட்டனுக்கு வந்தவுடன் பிசிஆர் அல்லது லேட்டரல் ஃப்ளோ சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்குள் பரிசோதனை செய்யவேண்டும்.
இன்று முதல் சிவப்பு பட்டியலில் இல்லாத நாட்டிலிருந்து வரும் அனைத்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பயண விதிகளையும் எளிதாக்குவதாக பிரிட்டன் அரசு கூறி உள்ளது. எனவே, அவர்கள் வருகையின் போது சுய-தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். அவர்கள் வந்த பிறகு லேட்டரல் ப்ளோ பரிசோதனையை மட்டுமே எடுக்க வேண்டும். இதில் பாசிட்டிவ் என வந்தால் உறுதி செய்வதற்கு பிசிஆர் சோதனை செய்ய வேண்டும்.
Leave your comments here...