பழமுதிர்சோலை முருகன் திருக்கோயிலில், மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவுபெற்ற கந்த சஷ்டி பெருவிழா…!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் மலை மீது பழமுதிர்சோலை முருகன் திருக்கோயில் உள்ளது.
இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் நிலையில், கடந்த 4ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார விழா கடந்த 9ஆம் தேதி திருக்கோயில் அருகே உள்ள நாவல் மரத்தடி விநாயகர் கோவில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில், அரோகரா மற்றும் வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷம் முழங்க நடைபெற்றது.
இதையடுத்து நேற்று சோலைமலை திருக்கல்யாண மண்டபத்தில், முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சீர் வரிசைகளுடன் மேளதாளங்கள் முழங்க திருமண வைபோகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதராக பூப்பல்லக்கில் எழுந்தருளி திருக்கோயிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் இறுதி நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழாவிற்கு முன்னதாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக திருக்கோயில் ஊஞ்சலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருக்கோயிலில் நடைபெற்ற இந்த கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அனிதா தலைமையில் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார் பிரதீபா நாராயணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்….
Leave your comments here...